சித்தமருத்துவம் - பகுதி 2

இந்த பிரபஞ்சம் எப்படி நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்சபூதங்களால் ஆனதோ அதுபோல நம் தேகமும் பஞ்சபூதங்களால் ஆனது என்கின்றனர் சித்தர்கள்.
உடம்பின் கடினமான பகுதிகளான எலும்பு, சதை போன்றவை நிலம் என்றும், உடம்பினுள் சுரக்கும் திரவங்கள், இரத்தம் போன்றவை நீர் என்றும், உடம்பின் வெப்பம் நெருப்பு என்றும், சுவாசம் - காற்று என்றும், இவையனைத்திற்கும் இடமளிக்கும் தேகம் ஆகாயம் என்றும் கொள்ளலாம்.

இதே போல உணர்வுகளையும் பஞ்சபூதங்களோடு ஒப்பிடுகிறார்கள். எவ்வாறெனில் நாசி வாசனையை உணர்வது நிலம், கண்பார்வை உணர்வது நெருப்பு, நாவின் சுவை உணர்வு நீர், தோலின் ஸ்பரிச உணர்வு வாயு, செவி உணரும் சப்தம் ஆகாயம் ஆகும்.


இது பற்றி திருமூலர் நாடி இவ்வாறு கூறுகிறது.

"வளப்பங்கேள் பூமி வசிக்கும் நாசியில்,
களப்பமாம் வன்னிதானுறுங் கண்ணினில்
அளப்பமாமப் போவடங்கிடும் நாவினில்,
பளப்ப நல்வாயுவும் பரிசிக்குமெங்குமே"
"எங்கிய காதிலிருந்துறுமாகாயம்"


இவ்வாறு ஐம்பூதங்களால் ஆன நம் தேகத்தில் முக்கியமான வேலைகளைச் செய்பவை மூன்று மட்டுமே.

அவை காற்று - வாதம் (வளி)
நெருப்பு - பித்தம் (அழல்)
நீர் - கபம் (ஐயம்)

எப்படி நீர், நெருப்பு, காற்று மூன்றும் அளவுக்கு அதிகமானாலோ அல்லது வெகுவாக குறைந்தாலோ நாம் சிரமப்படுவோமோ அதுபோலவே வாதம், பித்தம், கபம் இம்மூன்றும் அதிகமானாலோ குறைந்தாலோ உடலுக்குத்தீங்கு ஏற்படும்.

(தொடரும்)

0 comments: