சிக்கன்குனியாவிற்கு சித்தமருந்து - வீடியோ

சிக்கன்குனியாவிற்கு சித்தமருந்துவத்தில் சிறந்த மருந்துகள் உள்ளன.
வீடியோவைப் பாருங்கள்.

பாலியல் நோய்கள் - வீடியோ பகுதி 1

பாலியல் நோய்கள் பற்றி பாண்டிச்சேரி மருத்துவர் தர்மராஜன் அவர்களின் பேட்டி.

கீரை வாங்கலியோ........கீரை!

நண்பர் இக்பால் முருங்கைக் கீரை பற்றியும், அதன் பயன்கள், மருத்துவ குணங்கள் அதிலுள்ள தாதுப்பொருட்கள் பற்றியும் மிகத்தெளிவாக தன் பதிவில் எழுதியுள்ளார்.

பீட்ஸா, பர்கர் என்று நமது உணவுப் பழக்கங்கள் மாறிப்போனது தான் இன்று பல நோய்களுக்கு காரணமாக உள்ளது. எனவே மக்களே வாரம் ஒரு நாளாவது உணவில் கீரையை சேர்த்துக் கொள்ளுங்கள்.

நாடி அறிதல்.

சித்தமருத்துவத்தில் பெருவிரல் பக்கமாக மணிக்கட்டிலிருந்து ஒரு அங்குலம் தள்ளி, நாடி நரம்பு ரத்தக்குழாயின் மேல் மூன்று விரல்களை
வைத்துச் சற்று அழுத்தியும் தளர்த்தியும் பார்க்கும்போது ஆள்காட்டி விரலாகிய முதல் விரலில் உணர்வது வாதநாடி எனவும்,
நடுவிரலில் உணர்வது பித்தநாடி எனவும், பெளத்திர (மோதிர) விரலில் உணர்வது கபநாடி எனவும் கூறப்படுகிறது.

இது பற்றி அகத்தியர் நாடியில்,

"கரிமுகனடியைவாழ்த்திக்
கைதனில் நாடி பார்க்கில்,
பெருவிரலங்குலத்தில்
பிடித்தபடி நடுவே தொட்டால்,
ஒரு விரலோடில் வாதம்
உயர்நடுவிரலிற் பித்தம்,
திருவிரல் மூன்றிலோடில்
சிலேத்தும் நாடி தானே"

என்றும், திருமூலர் நாடியில்,

"குறியாய் வலக்கரங்குவித்த பெருவிரல்,
வறியாயதன் கீழ் வைத்திடு மூவிரல்
பிரிவாய் மேலேறிப் பெலத்ததுவாதமாம்
அறிவாய் நடுவிரலமர்ந்தது பித்தமே"

"பித்தத்தின் கீழே புரண்டதையமாம்,
உற்றுற்றுப் பார்க்கவோர் நரம்பேயோடிடும்
பத்தித்த மூவரும் பாய்கின்ற வேகத்தால்
மத்தித்த நாளம்போல் வழங்கும் நரம்பிதே"

என்றும் கூறப்பட்டுள்ளது.

நாடி நரம்பு ரத்தக்குழாயின் மேல் மூன்று விரல்களை வைத்துச் சற்று அழுத்தியும் தளர்த்தியும் பார்க்கும்போது
1:1/2:1/4 என்ற மாத்திரையளவிலிருந்தால் உடல் நல்ல நிலையில் இருக்கிறது என்று சித்தர்கள் கணக்கிட்டுள்ளார்கள்.

மாத்திரை என்றால் என்ன என்பதை அடுத்த பதிவில் காண்போம்.

(தொடரும்)

தலைவலியா?

*அகத்தி இலைச்சாறு எடுத்து நெற்றியில் தடவினால் தலைவலி குணமாகும்.

*ஒற்றைத் தலைவலி குணமாக பூண்டை அரைத்துப் பூசலாம்.

*சூடான, பால் கலக்காத டீயில் எலுமிச்சம் சாறு கலந்து பருகினால் தலைவலி குணமாகும்.

*விரலி மஞ்சலை விளக்கெண்ணெயில் நனைத்து நெருப்பில் சுட்டு அதன் புகையை சுவாசித்தால் தலைவலி குணமாகும்.

*ஒரு துண்டு பெருங்காயம், ஒரு துண்டு சுக்கு இரண்டையும் பசும்பால் விட்டு அரைத்து நெற்றியில் பற்றுப்போட்டால் தலைவலி குணமாகும்.

*வெற்றிலை சாறெடுத்து 2 அல்லது 3 துளிகள் காதில்விட தலைபாரம், காதுகுத்தல் குணமாகும்.

சித்தமருத்துவம் - பகுதி 2

இந்த பிரபஞ்சம் எப்படி நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்சபூதங்களால் ஆனதோ அதுபோல நம் தேகமும் பஞ்சபூதங்களால் ஆனது என்கின்றனர் சித்தர்கள்.
உடம்பின் கடினமான பகுதிகளான எலும்பு, சதை போன்றவை நிலம் என்றும், உடம்பினுள் சுரக்கும் திரவங்கள், இரத்தம் போன்றவை நீர் என்றும், உடம்பின் வெப்பம் நெருப்பு என்றும், சுவாசம் - காற்று என்றும், இவையனைத்திற்கும் இடமளிக்கும் தேகம் ஆகாயம் என்றும் கொள்ளலாம்.

இதே போல உணர்வுகளையும் பஞ்சபூதங்களோடு ஒப்பிடுகிறார்கள். எவ்வாறெனில் நாசி வாசனையை உணர்வது நிலம், கண்பார்வை உணர்வது நெருப்பு, நாவின் சுவை உணர்வு நீர், தோலின் ஸ்பரிச உணர்வு வாயு, செவி உணரும் சப்தம் ஆகாயம் ஆகும்.


இது பற்றி திருமூலர் நாடி இவ்வாறு கூறுகிறது.

"வளப்பங்கேள் பூமி வசிக்கும் நாசியில்,
களப்பமாம் வன்னிதானுறுங் கண்ணினில்
அளப்பமாமப் போவடங்கிடும் நாவினில்,
பளப்ப நல்வாயுவும் பரிசிக்குமெங்குமே"
"எங்கிய காதிலிருந்துறுமாகாயம்"


இவ்வாறு ஐம்பூதங்களால் ஆன நம் தேகத்தில் முக்கியமான வேலைகளைச் செய்பவை மூன்று மட்டுமே.

அவை காற்று - வாதம் (வளி)
நெருப்பு - பித்தம் (அழல்)
நீர் - கபம் (ஐயம்)

எப்படி நீர், நெருப்பு, காற்று மூன்றும் அளவுக்கு அதிகமானாலோ அல்லது வெகுவாக குறைந்தாலோ நாம் சிரமப்படுவோமோ அதுபோலவே வாதம், பித்தம், கபம் இம்மூன்றும் அதிகமானாலோ குறைந்தாலோ உடலுக்குத்தீங்கு ஏற்படும்.

(தொடரும்)

சித்தமருத்துவம் - பகுதி 1

உலகத் தமிழர்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

சித்தமருத்துவத்தில் முக்கியமான விடயம் நாடி அறிதல்.
நாடி என்றால் என்ன? நாடி என்பது வாத, பித்த, ஐயங்களைக் குறிக்கும் தாது மற்றும்
நாடி நரம்பு ரத்தக்குழாயிலேற்படும் துடிப்பு ஆகும். நாடி என்பது இருதயத்தின் தொடர்பு.
இருதயத்தின் செயல்களில் ஏற்படும் வேறுபாடுகளை நாடியின் மூலம் நாம் அறிகிறோம்.
உடம்பில் ஏற்படும் நோயை இருதயம் தெரிந்து கொண்டு நாடிகளின் மூலம் நமக்கு
அறிவிக்கின்றது. சுருக்கமாகக் கூறினால் உடலில் உயிர் இருப்பதற்குக் காரணமான
சக்தி எதுவோ அதுவே நாடி எனப்படுகிறது.

(வெண்பா)

1."இருப்பான நாடி எழுபதோடீரா
யிரமானதேகத்தில் ஏலப் பெருநாடி
ஒக்கதசமத்தொழிலை ஊக்கதச வாயுக்கள்
தக்கபடி என்றே சாரும்"2."சாருந்தசநாடிதன்னில் மூலம் மூன்று
பேருமிடம் பிங்கலையும் பின்னலுடன்-மாறும்
உரைக்கவிரற்காற்றொட்டுணர்த்துமே நாசி
வரைச் சுழியோமையத்தில் வந்து"


3."வந்தகலை மூன்றில் வாயுவாமபானனுடன்
தந்த பிராணன் சமானனுக்குஞ் சந்தமறக்
கூட்டுறவு ரேசித்தல் கூறும் வாதம் பித்தம்
நாட்டுங்கபமேயாம் நாடு"
-கண்ணுசாமியம்.

இதன் பொருள் எழுபத்தீராயிரம் நாடிநரம்பு ரத்தக்குழாய்கள் உடல் முழுவதும் மேல்கீழாய்
சென்று வருகிறது. இவற்றில் பெருநாடிகள் என அழைக்கப்படுபவை பத்து நாடிகள் (தச நாடிகள்)இவற்றில் முக்கியமானவை மூன்று மூலாதார நாடிகளாகிய இடகலை, பிங்கலை, சுழிமுனை என்பவையாகும். இம்மூன்றும் அபானன், பிராணன், சமானன் என்னும் வாயுக்கள் கூட்டாக தொழில் புரியும் போது வாத பித்த கபம் (வளி, அழல், ஐயம்) என்ற மூன்று சக்திகள் தோன்றுவதாகக் கூறப்பட்டுள்ளது.

(தொடரும்)