இந்த பிரபஞ்சம் எப்படி நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்சபூதங்களால் ஆனதோ அதுபோல நம் தேகமும் பஞ்சபூதங்களால் ஆனது என்கின்றனர் சித்தர்கள்.
உடம்பின் கடினமான பகுதிகளான எலும்பு, சதை போன்றவை நிலம் என்றும், உடம்பினுள் சுரக்கும் திரவங்கள், இரத்தம் போன்றவை நீர் என்றும், உடம்பின் வெப்பம் நெருப்பு என்றும், சுவாசம் - காற்று என்றும், இவையனைத்திற்கும் இடமளிக்கும் தேகம் ஆகாயம் என்றும் கொள்ளலாம்.
இதே போல உணர்வுகளையும் பஞ்சபூதங்களோடு ஒப்பிடுகிறார்கள். எவ்வாறெனில் நாசி வாசனையை உணர்வது நிலம், கண்பார்வை உணர்வது நெருப்பு, நாவின் சுவை உணர்வு நீர், தோலின் ஸ்பரிச உணர்வு வாயு, செவி உணரும் சப்தம் ஆகாயம் ஆகும்.
இது பற்றி திருமூலர் நாடி இவ்வாறு கூறுகிறது.
"வளப்பங்கேள் பூமி வசிக்கும் நாசியில்,
களப்பமாம் வன்னிதானுறுங் கண்ணினில்
அளப்பமாமப் போவடங்கிடும் நாவினில்,
பளப்ப நல்வாயுவும் பரிசிக்குமெங்குமே"
"எங்கிய காதிலிருந்துறுமாகாயம்"
இவ்வாறு ஐம்பூதங்களால் ஆன நம் தேகத்தில் முக்கியமான வேலைகளைச் செய்பவை மூன்று மட்டுமே.
அவை காற்று - வாதம் (வளி)
நெருப்பு - பித்தம் (அழல்)
நீர் - கபம் (ஐயம்)
எப்படி நீர், நெருப்பு, காற்று மூன்றும் அளவுக்கு அதிகமானாலோ அல்லது வெகுவாக குறைந்தாலோ நாம் சிரமப்படுவோமோ அதுபோலவே வாதம், பித்தம், கபம் இம்மூன்றும் அதிகமானாலோ குறைந்தாலோ உடலுக்குத்தீங்கு ஏற்படும்.
(தொடரும்)
சித்தமருத்துவம் - பகுதி 2
Posted by
sidhan
at
0
comments
Labels: சித்தமருத்துவம்
சித்தமருத்துவம் - பகுதி 1
உலகத் தமிழர்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
சித்தமருத்துவத்தில் முக்கியமான விடயம் நாடி அறிதல்.
நாடி என்றால் என்ன? நாடி என்பது வாத, பித்த, ஐயங்களைக் குறிக்கும் தாது மற்றும்
நாடி நரம்பு ரத்தக்குழாயிலேற்படும் துடிப்பு ஆகும். நாடி என்பது இருதயத்தின் தொடர்பு.
இருதயத்தின் செயல்களில் ஏற்படும் வேறுபாடுகளை நாடியின் மூலம் நாம் அறிகிறோம்.
உடம்பில் ஏற்படும் நோயை இருதயம் தெரிந்து கொண்டு நாடிகளின் மூலம் நமக்கு
அறிவிக்கின்றது. சுருக்கமாகக் கூறினால் உடலில் உயிர் இருப்பதற்குக் காரணமான
சக்தி எதுவோ அதுவே நாடி எனப்படுகிறது.
(வெண்பா)
1."இருப்பான நாடி எழுபதோடீரா
யிரமானதேகத்தில் ஏலப் பெருநாடி
ஒக்கதசமத்தொழிலை ஊக்கதச வாயுக்கள்
தக்கபடி என்றே சாரும்"
2."சாருந்தசநாடிதன்னில் மூலம் மூன்று
பேருமிடம் பிங்கலையும் பின்னலுடன்-மாறும்
உரைக்கவிரற்காற்றொட்டுணர்த்துமே நாசி
வரைச் சுழியோமையத்தில் வந்து"
3."வந்தகலை மூன்றில் வாயுவாமபானனுடன்
தந்த பிராணன் சமானனுக்குஞ் சந்தமறக்
கூட்டுறவு ரேசித்தல் கூறும் வாதம் பித்தம்
நாட்டுங்கபமேயாம் நாடு"
-கண்ணுசாமியம்.
இதன் பொருள் எழுபத்தீராயிரம் நாடிநரம்பு ரத்தக்குழாய்கள் உடல் முழுவதும் மேல்கீழாய்
சென்று வருகிறது. இவற்றில் பெருநாடிகள் என அழைக்கப்படுபவை பத்து நாடிகள் (தச நாடிகள்)இவற்றில் முக்கியமானவை மூன்று மூலாதார நாடிகளாகிய இடகலை, பிங்கலை, சுழிமுனை என்பவையாகும். இம்மூன்றும் அபானன், பிராணன், சமானன் என்னும் வாயுக்கள் கூட்டாக தொழில் புரியும் போது வாத பித்த கபம் (வளி, அழல், ஐயம்) என்ற மூன்று சக்திகள் தோன்றுவதாகக் கூறப்பட்டுள்ளது.
(தொடரும்)
Posted by
sidhan
at
0
comments
Labels: சித்தமருத்துவம்
சித்தமருத்துவம் - ஒரு அறிமுகம்
சித்தமருத்துவம் மிகத்தொன்மையான மருத்துவம். சித்தர்களின் நீண்ட நெடிய ஆராய்ச்சியின் பயனாக நமக்குக் கிடைத்த பொக்கிசம்.ஆனால் நம்மில் பலருக்கு சித்தமருத்துவம் பற்றிய விழிப்புணர்வு இல்லை.
எனவேதான் சித்தமருத்துவம் பற்றியும் அதன் சிறப்புப் பற்றியும் தொடர்ந்து எழுதவே இந்தப்பதிவு தொடங்கப்ட்டுள்ளது. வாருங்கள்..... படித்துப் பயன்பெறுங்கள். உங்கள் கருத்துக்களை பதிந்துசெல்லுங்கள்.
Posted by
sidhan
at
0
comments
Labels: சித்தமருத்துவம்