சித்தமருத்துவம் - பகுதி 1

உலகத் தமிழர்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

சித்தமருத்துவத்தில் முக்கியமான விடயம் நாடி அறிதல்.
நாடி என்றால் என்ன? நாடி என்பது வாத, பித்த, ஐயங்களைக் குறிக்கும் தாது மற்றும்
நாடி நரம்பு ரத்தக்குழாயிலேற்படும் துடிப்பு ஆகும். நாடி என்பது இருதயத்தின் தொடர்பு.
இருதயத்தின் செயல்களில் ஏற்படும் வேறுபாடுகளை நாடியின் மூலம் நாம் அறிகிறோம்.
உடம்பில் ஏற்படும் நோயை இருதயம் தெரிந்து கொண்டு நாடிகளின் மூலம் நமக்கு
அறிவிக்கின்றது. சுருக்கமாகக் கூறினால் உடலில் உயிர் இருப்பதற்குக் காரணமான
சக்தி எதுவோ அதுவே நாடி எனப்படுகிறது.

(வெண்பா)

1."இருப்பான நாடி எழுபதோடீரா
யிரமானதேகத்தில் ஏலப் பெருநாடி
ஒக்கதசமத்தொழிலை ஊக்கதச வாயுக்கள்
தக்கபடி என்றே சாரும்"



2."சாருந்தசநாடிதன்னில் மூலம் மூன்று
பேருமிடம் பிங்கலையும் பின்னலுடன்-மாறும்
உரைக்கவிரற்காற்றொட்டுணர்த்துமே நாசி
வரைச் சுழியோமையத்தில் வந்து"


3."வந்தகலை மூன்றில் வாயுவாமபானனுடன்
தந்த பிராணன் சமானனுக்குஞ் சந்தமறக்
கூட்டுறவு ரேசித்தல் கூறும் வாதம் பித்தம்
நாட்டுங்கபமேயாம் நாடு"
-கண்ணுசாமியம்.

இதன் பொருள் எழுபத்தீராயிரம் நாடிநரம்பு ரத்தக்குழாய்கள் உடல் முழுவதும் மேல்கீழாய்
சென்று வருகிறது. இவற்றில் பெருநாடிகள் என அழைக்கப்படுபவை பத்து நாடிகள் (தச நாடிகள்)இவற்றில் முக்கியமானவை மூன்று மூலாதார நாடிகளாகிய இடகலை, பிங்கலை, சுழிமுனை என்பவையாகும். இம்மூன்றும் அபானன், பிராணன், சமானன் என்னும் வாயுக்கள் கூட்டாக தொழில் புரியும் போது வாத பித்த கபம் (வளி, அழல், ஐயம்) என்ற மூன்று சக்திகள் தோன்றுவதாகக் கூறப்பட்டுள்ளது.

(தொடரும்)

0 comments: